ஆழ்ந்த அனுதாபங்கள்



அண்மையில் யாழ்ப்பாண நகர உயர்பாதுகாப்பு வலயத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் எமது கணித ஆசிரியர் க.மோகன் காயமடைந்ததுடன் அவரது பத்து வயது மகன் உயிரிழந்துள்ளார்.
இந்த துரதிருஷ்டமான சம்பவங்களால் பெரிதும் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது க.பொ.த(உ/த) பிரிவு மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனைய பொதுமக்களும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
_____________________________________________________________

இதுபற்றி நிறைய எழுதினேன், இரண்டு நாள் கழித்து திரும்ப யோசித்துப்பார்த்தேன்,,
எழுதியிருக்க வேண்டாம் என்று தோன்றியது..
அழித்தாயிற்று!!

எங்கே செல்லும் இந்தப் பாதை!!?

தலைக்கருகில் எனது கைத்தொலைபேசி கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிக்கொண்டிருக்கிறது,உண்மையிலேயே.. எங்கேயோ பதிவிறக்கிய அந்த ரிங்ரோன் எனக்கு அலாரமாகப் பயன்படுகிறது.
என்ன செய்வது இப்போதெல்லாம் நமது காலைகள் கொழும்பில் இப்படித்தானே விடிகின்றன..

சீ என்ன சனியன் இது,, கையால் தடவி கட்டிலின் ஓரத்திலிருந்த செல்போனை கண்டுபிடித்து எழுந்தமானமாக ஒரு கீயை அழுத்துகிறேன்., கூவல் ஓய்ந்து விடுகிறது..

அப்பாடி இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம் என்ற என்னுடைய கனவு கனவாகவே முடிந்துவிடுகிறது.. ஐந்து நிமிடங்களில் மீண்டும் அலறல், என் போன்றவர்களின் புத்தியை அறிந்து ஸ்னூஸ் அலாரமாக வடிவமைத்த ஜப்பான்காரனின் புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும் போல் இருந்தது..
அப்படியே மெல்ல கண்ணைத்திறந்து செல்போனில் நேரத்தைப் பார்க்கிறேன், 5.50 AM

அடடா 6 மணி ஆகப்போகிறது, குளித்து வெளிக்கிட்டு காலை சாப்பாட்டை 6.30 ற்கே முடித்துவிட்டு ஓடிப்போய் 7மணிக்கு முன்பாக பஸ்ஸை பிடித்தால்தான் 2 பஸ் மாறி 8 மணிக்கு கம்பஸுக்கு போய்ச்சேரலாம், என்று பதறிக்கொண்டே எழுந்து ஓடுகிறேன் குளியலறைக்கு.

அடுத்தடுத்து மிக விரைவாக எனது காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸைப்பிடிக்க ஓட்டம்..
வெள்ளவத்தையிலிருந்து 100 அல்லது 101 பஸ்ஸை குறைந்தது 7 மணிக்குப் பிடித்தால்தான் 8 மணிக்கு மொறட்டுவைக்கு போய்ச்சேரலாம். ம்ம்.. பஸ்ஸில் ஏறினால் ஒரு மணிநேரத்திற்கு வேறென்ன செய்வது.. அப்படியே ஏகாந்தமாக ஜன்னலோரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்..

இப்போதெல்லாம் தொலைதூர பஸ்களை பிடிப்பதேயில்லை.. இரண்டு பஸ்களில் குண்டு வெடித்ததின் பின்னர்..
அதற்கு முன் எப்போதும் எக்ஸ்பிரஸ் பஸ்களையே எடுப்பது வழக்கம், நின்று செல்ல வேண்டியிருப்பினும் மிகவிரைவாக சென்றுவிடமுடியும் என்பதால்..
நேற்றும் கூட மாலையில் கம்பஸ் முடிந்து கட்டுபெத்தை சந்தியில் பஸ்ஸிற்கு நிற்கிறோம், கால்ல-கொழம்ப(காலி-கொழும்பு) பெயர்பலகையுடன் மிகவேகமாக வருகிறது பஸ் ஒன்று, பழக்கதோசத்தில் ஒடிச்செல்ல, வேண்டாமடா, கொழும்புக்குள்ளையும் வைப்பம் எண்டு காட்டுறதுக்கு வச்சாலும் வைப்பாங்கள், என்னத்துக்கு வம்பை.. நண்பன் தடுக்கிறான்.

இன்று என்னவோ ஒருவித சந்தோசம், அடுத்தடுத்து 2 பதிவுகளைப் போட்டுவிட்டு மூன்றாவது பதிவு ஒரு 10 நாள் கழித்துதான் போடப்போகிறேன், பிறகென்ன தமிழ்மணத்தில் இணைந்துகொள்வதுதானே.. இனி நானுமொரு தமிழ்மண பதிவர்..

ம்ம்.. எப்போதும் பார்த்துப்பழகிய நண்பர்களைவிட புதிய நண்பர்கள் கிடைக்கப்போகிறார்கள், அதுவும் வேறுவேறு இடங்களிலிருந்து,
இனம்புரியாதவொரு சந்தோசம் எனக்கு. இண்டைக்கு லன்ச் இன்ரேவல் க்கு பிறகு ஒண்டுமில்லை. முதல்வேலையா லப்புக்கு போகவேணும். நிறைய டவுன்லோட் செய்ய வேணும்..அப்பிடியே என்ர புளொக்குக்கு கொஞ்ச வேலை கிடக்குது..

பொக்கற்றுக்குள் இருக்கிற பென்டிரைவ் உறுத்துகிறது. எழுதிய மூன்றாவது பதிவு அதனுள்..
"மண்வாசம் பிடிக்குமா உங்களுக்கு" என்ற தலைப்பில் எழுதிய சற்றே வித்தியாசமானதொரு கட்டுரை,
சின்ன வயதிலிருந்தே எனக்கு நீண்டகாலத்திற்கு பிறகு வரும் மழைக்கு எழுகின்ற மண்வாசம் மிகவும் பிடிக்கும்.
நான் ஒன்பது வயது இருக்கும் போதே அது சம்பந்தமாக புத்தகங்களில் எல்லாம் தேடிப்படித்திருக்கிறேன், ஏன் அப்படி வாசம் வருகிறதென்று.
நேற்று காலையில் நடந்த ஒரு புகைப்படக்கலை விரிவுரையின் போது ஒரு மாரித்தவளையின் படம் வந்தது, அதை வைத்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார் விரிவுரையாளர், நாம் நமது பாடு..
அப்போது நானும் நண்பனும் சேர்ந்து நாங்கள் எது எதையெல்லாம் மிஸ் பண்ணுகிறோம் என்று பட்டியலிட்டதில் ஞாபகத்திற்கு வந்ததுதான் இந்த மண்வாசம்., அதனையே சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி எழுதியிருந்தேன் நேற்றிரவு.

எஞ்ஜினியரிங்கில என்னடா புகைப்படக்கலை என்று யாரும் கேட்கலாம், எமது கம்பஸில் 2 வது செமஸ்டர் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கிடையில் இப்படித்தான் எமது புறக்கிருத்திய செயற்பாடுகளை ஊக்குவிக்கவென்று ஏதாவது செய்வார்கள்.
அதன் பயனாக இப்போது கமராவும் கையுமாக திரிகிறோம்..X(

சின்ன வயசில எங்களுக்கு ஏத்திவிட்ட வாத்திமார நினச்சா கோவமா வருது. O/L வரேக்க சொல்லுவினம்
"அடேய் இதுதான்டா உன்ர எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போற பரீட்சை, கவனமாப் படியுங்கோ..!"..
சரி ஒரு வருடம் விழுந்துகட்டிப் படித்து O/L வடிவா பாஸ் பண்ணி A/L போயாச்சு.
அப்போதுதான் விளங்கியது A/L எவ்வளவு கஸ்டம் என்று. அதுவும் கணிதம்..

யாராவது கேட்டால் மத்ஸ் எண்டு விலாசமா சொல்லலாம், ஆனா படிக்கிற கஷ்டம் படிச்சவனுக்குத்தான் தெரியும்.
இப்பவும் அதே பல்லவி.
"A/L தாண்டா வாழ்க்கை. படிக்காம விளையாடினியோ பிறகு வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுவாய்"
வாத்தியார் மிரட்ட மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் 2 வருடங்கள் ஓடி ஓடி படிப்பு.
A/L எழுதி முடிஞ்சு முடிவும் வந்திட்டுது. எங்கட கோஷ்டி எல்லாருக்கும் நல்ல ரிசல்ட்.
முடிவுகளை சொல்ல பள்ளிக்கூடத்திற்கு செல்கிறோம்,, ஒவ்வொரு ஆசிரியராக சந்தித்து கைகுடுத்து ஐந்து நிமிடம் பேசி.., ஆரம்பத்தில் அறிவுரை சொன்ன அதே கணித ஆசிரியர். பெயர் மோகன்,

"தம்பி, இனிமேல்தான் நீங்கள் கவனமா படிக்கோணும், A/L மாதிரி கம்பஸில நோட்ஸ் ஒண்டும் தரமாட்டினம்.
நீங்களா நிறைய Refer பண்ணி படிக்கவேணும். கம்பஸில கிளாஸ் அடிச்சாதான் சுகம், கம்பஸ் முடிய முதலே வேலைக்கு எடுத்துப் போடுவினம், இல்லாட்டிக்கு ஒவ்வொரு கொம்பனியா இன்ரவியூவுக்கு ஏறி இறங்க வேண்டியதுதான்.
கம்பஸோட ஒப்பிடேக்க A/L எவ்வளவோ சுகம். இனித்தான் விளையாட்ட விட்டிட்டு கவனமாப் படிக்கோணும்."
இவரே இப்ப வந்திருக்கிற புதிய பிரிவு மாணவர்களுக்கு எமக்கு முன்னர் கூறிய அதே அறிவுரையை சொல்லிக்கொண்டிருப்பார்..!! :)

"எங்கே செல்லும் இந்தப் பாதை.." பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
எங்கே செல்லும்? எனக்குத்தெரியாது..!
 :-O

ஞாபகங்கள் கலைந்துவிட இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.. கட்டுபெத்தை சந்தியில் இறங்கி 255 பஸ் எடுக்க வேண்டும், நேரம் 7.45.. போக ஐந்து நிமிடம்தான் எடுக்கும் என்றாலும் நிறுத்தியிருக்கிற பஸ்ஸை எடுக்க பத்து நிமிடம் செல்லும். (அது தரிப்பிடமல்ல, ஒரு பஸ் நிறுத்தம்)
நண்பர்களுடன் ஒன்றாக வரும்போது நகைச்சுவையாகப் பேசிக்கொள்வோம், 255 பஸ் ட்ரைவர்மார் நித்திரை கொண்டாலும் காலை ஆட்டி ஆட்டிக் கொண்டேதான் கொள்ளுவார்களென்று. அந்த அளவுக்கு அக்சிடேட்டரையும் பிறேக்கையும் மாறி மாறி அழுத்துவதும் விடுவதுமாக இருப்பார்கள், இப்படியே பின்னால் அடுத்த பஸ் வரும்வரை நகர்ந்துகொண்டே இருக்கும். புதியவர்கள் யாரும் வந்தால் ஏதோ பஸ் புறப்படப்போவதாக எண்ணி ஏறிக்கொள்வார்கள். நாமதான் அனுபவசாலிகளாச்சே, சரியாக மற்ற பஸ் வரும்போது ஓடி ஏறிக்கொள்வோம், மேலும் எமது ஆண்மைக்கு அடையாளமாக மிதிபலகையில் நின்றுதான் செல்வோம் என்பதை சொல்லத்தேவையில்லை. :)

இதோ அதற்கான நேரமும் வந்துவிட்டது, பின்னால் அடுத்த பஸ் வருகிறது, இதில் Oscillate பண்ணிக்கொண்டிருந்த பஸ் புறப்படப்போகிறது.
"ஹலோ மச்சாங் கோமத?" தோளிலொரு கை விழுகிறது. பாணந்துறையிலிருந்து வரும் நண்பன் சஞ்ஜீவ.
"ஹொந்த தமாய், ஒயா கோமத?" வழக்கமான சம்பாஷணைகளுடன் புறப்படும் பஸ்ஸில் ஏறி விரைகிறேன்.
(இன்னும் வளரும்)

Labels:

என்னப் பற்றி

  • பெயர்: படியாதவன்
  • இடம்: கொழும்பு, Sri Lanka
  • சொல்லுறதுக்கு பெரிசா ஒண்டும் இல்லை..
முழுக்க பாக்க

குப்பைத்தொட்டி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.கொம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உதவி: Blogger
& Blogger Templates